பிரசாரத்துக்கு முன்னோட்டம்... இரவில் 2 கி.மீ. தூரம் நகர்வலம் வந்த அமைச்சர் கே.என்.நேரு
- தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.
- அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார்.
திருச்சி:
மலைக்கோட்டை மாநகரில் எண்ணிலடங்கா திட்டங்களை ஆளுங்கட்சியில் தான் அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி போராடி பெற்றத்தந்தவர் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கே.என்.நேரு. தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும், டெல்டா மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராகவும், தி.மு.க.வின் முதன்மை செயலாளராகவும் இருந்து வருகிறார்.
தமிழக அமைச்சர்களில் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வில் மாபெரும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தி மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியிடமும், தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடமும் பாராட்டு பெற்றவர்.
2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பரபரப்பான அரசியல் புயல் தமிழகத்தை மையம் கொண்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக பணியாற்றி வருகின்றன. ஒருபுறம் மக்கள் சந்திப்பு பயணங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மறுபுறம் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களால் அனல் பறக்கிறது.
இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேரு நேற்று இரவு 7 மணி அளவில் திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகே நடைபெற்ற தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தார். பின்னர் மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வந்த அவர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.
அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமுவும் சென்றார். பஞ்சவர்ண சுவாமி கோவில் ரோட்டில் இருந்து சாலை ரோடு வழியாக தில்லைநகர் பகுதிக்குள் நுழைந்து தனது வீடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது வழியெங்கிலும் அவரை கடந்து சென்றோரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக தில்லை நகரில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்த அமைச்சர் கே.என்.நேரு தன்னை சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்ததுடன் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகளிடம் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் ஓரிரு வரிகளில் கேள்விகளுடன் பதில்களையும் அளித்தவாறு சென்றார்.
அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார். நகராட்சி துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை திரும்பத் திரும்ப நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழக டி.ஜி.பி.க்கு ஒருபுறம் கடிதம் எழுதி வரும் நிலையில், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பது போல அவர் சொந்த ஊரில் மிகவும் இயல்பாக நடந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.