இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.
- மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 28,784 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது இன்று காலை முதல் வினாடிக்கு 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 22,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 31,000 கன அடியாக உள்ள நிலையில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.