மெரினாவில் உள்ள மூங்கில் நிழல் இருக்கைகள்.
மூங்கில் இருக்கைகள், அலங்கார வளைவுகள்... 'கோவா' போல மாறும் மெரினா
- கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது.
- கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
மெரினா சென்னையின் முக்கிய அடையாளம். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஒற்றை பெயர் சென்னையின் வரலாற்றை சொல்லும். பல கனவுகளுடன் சென்னைக்கு வருபவர்களுக்கு அலைகளும், கடற்கரை மணற்பரப்பும் வாழ்க்கையை மகிழ்விக்கும் வழிகாட்டியாக காலம் காலமாக திகழ்ந்து வருகிறது.
வரலாறு படைத்த தலைவர்களை சிலைகளாக தாங்கிக்கொண்டு, உழைப்பை வலியுறுத்தும் உழைப்பாளர் சிலையை தன்னகத்தே கொண்டுள்ள மெரினாவில் பல சரித்தர சாதனை கூட்டங்கள், பேரணிகள் அரங்கேறியுள்ளது. மண்ணின் மக்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட மெரினா இன்றைக்கு ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது.
தினமும் வந்து செல்லும் மக்களை மகிழ்விக்காமல் ஒருபோதும் மெரினா விட்டதில்லை, அதன் அலைகளும் ஓய்ந்ததில்லை. அந்த அளவுக்கு சென்னையுடன் ஒன்றி பிணைந்த மெரினா தற்போது, காலத்திற்கேற்ப தன்னை மாற்றி வருகிறது. நீலக்கொடி சான்றை பெறும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது.
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் அலங்கார வளைவு.
பாதம் நனைக்கும் அலைகளை ரசித்த மக்களுக்கு தற்போது பெரியவர்கள் அமரும் மூங்கில் இருக்கைகள், கோவாவை போன்று படுத்துக்கொண்டு கடலை ரசிக்கும் இருக்கைகள், நிழலுக்காக ஒதுங்கும் கோபுர குடைகள், மூங்கிலால் ஆன வரவேற்பு அலங்கார வளைவுகள் என மெரினா ரொம்பவே மாறி போச்சு.
கண்ணுக்கு குளிர்ச்சியாக மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சீஸா, ஊஞ்சல் என மெரினாவே அட்டகாசமாக மாறியுள்ளது. இது குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காலி பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரைக்கு வரும் மக்களை கண்காணிப்பதற்காக மூங்கில் கண்காணிப்பு கோபுரங்கள் நவீன தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
உடற்பயிற்சி உபகரணங்கள், மணற்பரப்பில் நடந்து செல்ல நவீன பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி, அவர்கள் பொழுதை போக்குவதற்கு சிறப்பு உபகரணங்கள், போதுமான அளவு கடற்கரை உள்ளே மூங்கிலால் அமைக்கப்பட்ட கழிவறைகள் என மெரினா கடற்கரை அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பல மாற்றங்களை கடந்து, நவீன மயமாகி வரும் மெரினாவில், பட்டினப்பாக்கம் வரை நீண்ட தூரத்திற்கு கடல் உணவக கடைகளின் விற்பனையும் களை கட்டி வருகிறது. இருளில் ஒளிரும் வண்ண விளக்குகளால் மெரினாவின் மொத்த அழகும் மனதை அள்ளிச் செல்லும். மெரினாவின் அழகையும், நவீனத்தையும் சேதப்படுத்தாமல் ரசிப்பதே உயிர்ப்பாக இருக்கும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.