தமிழ்நாடு செய்திகள்

சென்னை வீட்டில் கொள்ளை.. நெதர்லாந்தில் அடித்தது அலாரம்.. மடக்கிப் பிடித்த போலீஸ்- நடந்தது என்ன?

Published On 2025-04-07 21:53 IST   |   Update On 2025-04-07 21:53:00 IST
  • செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தை வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
  • வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

சென்னை, மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட் ரமணன். இவரது மனைவி கலா. இவர்களது மகள் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வெங்கட் ரமணனும், அவரது மனைவியும் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெதர்லாந்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர்.

இந்த வீட்டில் ஏற்கனவே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் மர்ம நபர்கள் வந்தால் செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தையும் வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெங்கட்ரமணனின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது செல்போன் மூலம் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

இதுபற்றி அவர் உடனடியாக செல்போன் மூலம் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கட சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் வெங்கட்ர மணனின் வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் பொருட்களுடன் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான அசோக் நகர் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகில் உள்ள பக்தவத்சலம் தெருவில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பல்லாவரம் பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பது தெரிந்தது.

இதில் பிடிபட்ட கொள்ளையன் கமலக்கண்ணன் மீது 70 வழக்குகளும் ஆரி பிலிப் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

நண்பர்களான இருவரும் கூட்டாக சேர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் ஆவர். போலீசார் விரட்டிசென்றபோது தப்பி ஓடமுயன்ற கொள்ளையன் ஆரி பிலிப் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கைதான 2 பேரிடம் இருந்து 6 பவுன் நகை, 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் மற்றும் கவரிங் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தின் பூட்டை உடைத்தும் புகுந்து உள்ளனர். அங்கு லேப்டாப் மட்டும் இருந்ததால் கொள்ளையடிக்காமல் திரும்பி வந்து இருக்கிறார்கள்.

அவர்கள் இதுபோல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News