தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது- மதுரை ஆதீனம்

Published On 2024-12-06 07:51 IST   |   Update On 2024-12-06 07:51:00 IST
  • கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் தண்டபாணி தேசிகருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று நடந்த வெள்ளி ரத தேர் வெள்ளோட்டத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. ஆதீனங்களில் பொற்கால அருள் ஆட்சி நடத்தும் தருமபுரம் ஆதீனத்திற்கு நான் அடிமை. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு வந்துள்ளேன். அமைச்சர் பெயர் சேகர்பாபு, என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு.

ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்குத்தான் சேரும். சிறப்பான முறையில் கோவில்களுக்கு அமைச்சர் திருப்பணிகள் செய்து வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை சேகர்பாபு செய்து காட்டியுள்ளார். நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆட்சி வளர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும்.

எனக்கும், அவருக்கும் சண்டை மூட்டி விட்டுள்ளனர். தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித்தரப்படுகிறது. ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் கலைஞரின் ஆசி பெற்றவர். கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் தண்டபாணி தேசிகருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம். தருமபுர ஆதீனம், அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை தி.மு.க.காரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News