அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து- சென்னை ஐகோர்ட்
- ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
- நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்.
சென்னை:
'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து சிவாஜி வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால் இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, ராம்குமார் தரப்புக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆகவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவு தவறானது என்று பிரபு தரப்பில் வாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும், உரிமையும் இல்லை என ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து, அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. எதிர்காலத்தில் எந்தவித உரிமையும் கோரமாட்டேன் என்று ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிரபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர். இதனால் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.