மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி: அதிகாரிகள் நேரில் ஆய்வு
- முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
- ஆய்வின் போது கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
வடவள்ளி:
கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் பக்தர்களால் முருகப்பெருமானின் 7-ம் படைவீடு என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் உலகளவில் முருக பக்தர்களை ஈர்க்கும் வகையில், மருதமலை அடிவாரத்தில் 184 அடி உயர முருகன் சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முருகன் சிலை அமைய உள்ள இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அது தவிர 2.48 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அந்த இடங்களை கையகப்படுத்துவது தொடர்பாக கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக மற்ற துறைகளுக்கு கடிதம் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக வருகிற 22-ந்தேதி(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடக்கிறது.
இந்த ஆய்வின் போது கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.