தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு

Published On 2025-08-19 14:39 IST   |   Update On 2025-08-19 14:39:00 IST
  • மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
  • 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, சென்னையில், 2 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.

இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சுமார் 118. 9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை சுமார் 26. 1 கி.மீட்டர் தொலைவுக்கும், இதே போல, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் சுமார் 45. 8 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தொலைவுக்கு மற்றொரு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் ரூ.9.928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.

இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து இருந்த நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News