தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இளம்பெண் கடத்தல்- 4 தனிப்படை அமைத்து காவல்துறை வலைவீச்சு

Published On 2025-11-07 09:01 IST   |   Update On 2025-11-07 09:52:00 IST
  • 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
  • 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் இருந்த காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை இருகூர் அத்தப்பகவுண்டன்புதூர் ரோட்டில் 25 வயது இளம்பெண் ஒருவரை 3 பேர் தாக்கி காருக்குள் தூக்கிப் போட்டுள்ளனர். பின்னர் அந்த கார் அங்கிருந்து இருகூர் நோக்கிச் சென்றுள்ளது. அந்த காரில் இருந்த பெண் சத்தம் போட்டு அலறி இருக்கிறார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளை நிற கார் சம்பவ இடத்தில் இருந்து வேகமாக செல்வதும், காரில் இருந்து பெண் கதறி அழுவதும் பதிவாகி இருந்தது.

இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காரில் கடத்தப்பட்ட பெண் யார், அவரை கடத்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அந்த காரின் எண்ணை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்துகிறார்கள். குடும்ப பிரச்சினை எதாவது இருந்து காரில் அழைத்து செல்லும் போது சத்தம் போட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் அந்த பெண் கடத்தப்பட்டாரா, பணிக்கு சென்று திரும்பிய பெண் யாராவது கடத்தப்பட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் இளம்பெண் யாரும் மாயமாகி உள்ளனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே காரில் கடத்தப்படும் இளம்பெண் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News