தமிழ்நாடு செய்திகள்

கவின் ஆணவ படுகொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமின் கோரிய வழக்கு 27-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2025-11-24 13:48 IST   |   Update On 2025-11-24 13:48:00 IST
  • சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை.
  • சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

மதுரை:

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கவின் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று பணியில் தான் இருந்தார். மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில், மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. கவினின் தாயார் தரப்பில், கூடுதல் வாதங்களை முன் வைக்க கூடுதல் கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கை நவம்பர் 27-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News