தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நடிகர் அஜித்தின் கருத்து வரவேற்கத்தக்கது - துரை வைகோ

Published On 2025-11-02 03:17 IST   |   Update On 2025-11-02 03:17:00 IST
  • பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி?
  • மக்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அண்மையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பேசிய நடிகர் அஜித், "நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருக்கும் பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.

கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது.

ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான நடிகர் அஜித்தின் கருத்து வரவேற்கத்தக்கது என ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அஜித் கூறிய கருத்தையே நானும் முன்பு கூறியிருந்தேன். மக்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். த.வெ.க. பிரசார கூட்டத்திற்கு குழந்தைகள், கர்ப்பிணிகளை அழைத்து வர வேண்டாம் என்று அந்த கட்சியினர் கூறியிருந்தபோதும், அதை மீறி நிறைய பேர் சென்றுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அரசியல் நிகழ்வு மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் இதுபோன்ற கூட்ட நெரிசல்களில் உயிரிழக்கின்றனர்.

எனவே மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். அந்த கருத்தை அஜித்தும் கூறியிருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது." என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News