கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
- 2-வது நாளாக நேற்று 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை.
- கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள் வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பினர். தொடர்ந்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று 2-வது நாளாக 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அவர்களை கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.
சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது?
நெரிசலில் சிக்கி ஆம்பு லன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எத்தனை பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்? எத்தனை பேர் பிணமாக சம்பவ இடத்திலிருந்து ஏற்றி சென்றீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.