கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள் திருச்சி கோர்ட்டில் விசாரணை
- ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடக்கிறது.
- த.வெ.க. மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ்சிடம் கைப்பற்றப்பட்ட காரும் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் 1316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். 306 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடக்கிறது.
நேற்று 9 பேர் ஆஜராகினர். இன்றும் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஆஜர் ஆகி விவரம் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வழக்கு திருச்சி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சி.பி.ஐ. சம்பந்தமான வழக்குகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பதால் இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் த.வெ.க. மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ்சிடம் கைப்பற்றப்பட்ட காரும் ஒப்படைக்கப்பட்டது. அதனை சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. தொடர்ந்து கரூர் விசாரணை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது உள்ளிட்ட உத்தரவுகளுக்கு இனிமேல் திருச்சி நீதிமன்றத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சி.பி.ஐ. விசாரணை முடிந்து இறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அந்த குற்றப்பத்திரிகையை பொறுத்து இந்த வழக்கு மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.