வழிபாடு
null

திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது

Published On 2025-10-10 14:06 IST   |   Update On 2025-10-10 14:07:00 IST
  • 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News