தமிழ்நாடு செய்திகள்

மக்கள் நீதி மய்யம் 8-ம் ஆண்டு விழா: கட்சி தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் நாளை பேசுகிறார்

Published On 2025-02-20 12:09 IST   |   Update On 2025-02-20 12:09:00 IST
  • கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (21-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

கட்சி தலைவர் கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். கமல்ஹாசன் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியினர் மத்தியில் பேச இருப்பதால் அவர் என்ன பேசப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசன் வருகிற ஜூலை மாதம் மேல்சபை எம்.பி.யாகி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றியும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றியும் கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தனது கொள்கையில் இருந்து சிறிதும் விலகாமல், தலைவர் காட்டும் பாதையில் பயணித்து, அரசியலில் பீடுநடை போட்டுவரும் மக்கள் நீதி மய்யத்துக்கு நடப்பாண்டும், வரும் ஆண்டும் வரலாற்றுத் திருப்புமுனைகளாக மாற உள்ளன.

மண், மொழி, மக்களைக் காக்கும் விஷயங்களில் சிறிதும் சமரசமின்றி, தொடர்ந்து களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் 8-ம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாட உள்ளோம்.

கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கும் இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைத் தவிர்த்து இதர மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், அவரவர் சார்ந்த மாவட்டம் மற்றும் தொகுதி அலுவலகங்களில் கட்சிக் கொடியேற்றியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் 8-ம்ஆண்டுத் தொடக்க விழாவை சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News