இன்ஸ்டாகிராம் பழக்கம்: குளத்தில் குதித்து காதலன் தற்கொலை- காதலிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர்.
- பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முன்பு திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள விநாயகர் கோவில் குளத்தின் ஓரம் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரவீன்குமார் ஒரு கட்டத்தில் அங்குள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட காதலியும், பிரவீன்குமாரை காப்பாற்றுவதற்காக சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்ற அபயக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குளத்தில் பார்த்துள்ளனர். அங்கு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது காதலி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரவீன்குமாரின் குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் காதலர்கள் குளத்தில் குதித்ததில் காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.