தமிழ்நாடு செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்: தாய்க்கு பதிலாக தேர்வெழுதிய பெண் கைது

Published On 2025-04-03 08:01 IST   |   Update On 2025-04-03 08:01:00 IST
  • நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.
  • சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.

நாகப்பட்டினம்:

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்துவிட்டு கையொப்பம் பெற்றார்.

அப்போது அங்கு தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு பெண் முககவசம் அணிந்து இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணிடம் முககவசத்தை அகற்றும்படி கூறினார். பின்னர் நுழைவு சீட்டை சோதனை செய்து பார்த்தார்.

அப்போது நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபரின் புகைப்படம் இருந்தது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வாம்பிகை(வயது 25) என்பது தெரிய வந்தது.

திருமணமான அவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிய வந்தது. இதேபோல அவர் கடந்த 28-ந் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை முககவசம் அணிந்து எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய் சுகந்தி 10-ம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்துள்ளபோது, மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார்? என அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். தாய்க்காக ஆள்மாறாட்டம் செய்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News