8 மாத கர்ப்பிணியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலன்
- ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர்.
- என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த பெண் பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தமூர்த்தி மகள் ஷாலினி (வயது25) என்பதும், 8 மாதம் கர்ப்பிணி என்பதும் தெரிந்தது. மேலும் அவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஷாலினியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட அவர் கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்றும், அவரை தேடி வந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். அதில், பந்திகுறி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (21) மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவர்களின் செல்போன் எண்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேகநாதனுக்கும், ஷாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மேகநாதன் தனது நண்பர் புகழேந்தி உதவியுடன் ஷாலினியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசாரிடம் கள்ளக்காதலன் மேகநாதன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
பல்லேரிப்பள்ளியை சேர்ந்த ஷாலினிக்கும், வேப்பனஹள்ளி அருகே உள்ள என் தாசிரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன் பின்னர் ஷாலினி கணவரை பிரிந்து வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறியை சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஆஞ்சி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில்தான் ஷாலினிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினி அவரது இரண்டாவது கணவருக்கு தெரியாமல் என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்ததில் ஷாலினி கர்ப்பமானார். அவர் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் எனது கர்ப்பத்திற்கு நீ தான் காரணம். எனவே நீ என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார். அவரை திருமணம் செய்ய விரும்பாத நான், அவரை ஏமாற்றி வந்தேன்.
ஆனாலும் ஷாலினி என்னை விடவில்லை. என்னுடன் அடிக்கடி செல்போனில் பேசி வாக்குவாதம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி என்னை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் என்று கூறினார்.
ஷாலினி மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக எனது நண்பரான கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவரை அழைத்துக்கொண்டு, கத்தியை மறைத்து எடுத்து சென்றேன்.
நான், ஷாலினி, புகழேந்தி 3 பேரும் ஒரே டூவிலரில் அன்றிரவு 11 மணிக்கு கோனேகவுண்டனூர் வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஷாலினி கூறினார். அப்போது, ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்தினேன். அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத நான் கர்ப்பிணி என்றும் பாராமல் புகழேந்தி உதவியுடன் ஷாலினியின் கழுத்தில் இருந்த துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிட்டு துடிக்க துடிக்க கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.
ஷாலினியை காணவில்லை என்று அவரது கணவர் ஆஞ்சி மற்றும் குடும்பத்தினர் தேடுவதை அறிந்தேன். போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனாலும் செல்போன் டவர் லோகேஷன் மூலமாக எங்களின் எண்ணை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கைதான மேகநாதன், புகழேந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் வாழ்ந்து, பின்னர் வாலிபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் நிறைமாத கர்ப்பிணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேப்பனப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.