தமிழ்நாடு செய்திகள்

நெல்லை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு- போலீசார் விசாரணை

Published On 2025-02-25 14:47 IST   |   Update On 2025-02-25 14:47:00 IST
  • மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.

நெல்லை:

மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த பெயர் பலகையில் இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தை கருப்பு மையால் அளித்துவிட்டு தமிழ் வாழ்க என அந்த பெயர் பலகையில் எழுதினர்.

இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி ரெயில் நிலையத்தில் யாரும் புகுந்து விடாமல் இருப்பதற்காக மாநகர போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில் நிலையத்தில் 2 கட்டிட நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தி.மு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்ட நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு என எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News