தீபாவளி நாளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
- கர்நாடகா, கேரளாவை ஒட்டிய தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மேற்கு மத்திய அரபிக்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அதே நேரத்தில் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் இன்று காலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் தீபாவளி நாளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் லட்சத்தீவு மற்றும் கர்நாடகா, கேரளாவை ஒட்டிய தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
20, 21 ஆகிய தேதிகளில் தெற்கு அரபிக்கடல் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியிலும், 22-ந்தேதி அன்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய அரபிக்கடல் பகுதியிலும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கர்நாடகா, கோவையை ஒட்டியுள்ள தென் மாவட்ட கடலோர மீனவர்கள் இன்று முதல் 20-ந்தேதி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மேற்கு மத்திய அரபிக்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இதற்கிடையே வருகிற 24-ந்தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.