தமிழ்நாடு செய்திகள்

தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை: சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரேநாளில் 10 அடி உயர்வு

Published On 2025-10-14 11:20 IST   |   Update On 2025-10-14 11:20:00 IST
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.
  • இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷனம் நிலவி வருகிறது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தற்போதே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1074 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3969 மி.கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை 76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 86.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 112 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து 1424 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 4837 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.10 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 161.64 மி.கன அடி.

ஆண்டிபட்டி 6, அரண்மனைபுதூர் 13.8, வீரபாண்டி 17.2, பெரியகுளம் 18, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2.2, வைகை அணை 20, போடி 3.2, உத்தமபாளையம் 5.2, கூடலூர் 8.4, பெரியாறு அணை 13.6, தேக்கடி 58.6, சண்முகாநதி அணை 14.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நேற்று கம்பம் வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Tags:    

Similar News