ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பொதுமக்கள் குடையுடன் வாகனங்களில் பயணித்த காட்சி.
நீலகிரியில் கனமழை - அவலாஞ்சி, பைன்பாரஸ்ட் சுற்றுலா தலங்கள் மூடல்
- சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
- விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஊட்டி பஸ் நிலையம், பிங்கா் போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பியவா்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவா்கள் அவதிக்கு உள்ளாகினர்.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் மாலை நேரங்களில் மிதமான குளிருடன் கூடிய காலநிலை நிலவியது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட்புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது மாலை நேரம் வரை தொடர்ந்து நீடித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடுங்குளிர் நிலவியது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற சுற்றுலா தலங்கள் வழக்கம் போல திறந்து இருந்தன. அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து, தங்கள் பொழுதை கழித்தனர்.