திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
- கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி இணையாக சாமி தரிசனம் செய்யயும் வகையில் மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பணிகள் முடிந்து பக்தர்கள் தங்கும் விடுதி, இரண்டாம் கட்டமாக பக்தர்கள் காத்திருக்கும் அறை, அலுவலக கட்டிடம் கலையரங்கம் என முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
அடுத்த கட்டமாக கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் திடீரென மயக்கம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேற அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் தற்போது பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் நாழிக்கிணறு வாகன நிறுத்தம் தற்காலிகமாக நாளை 31-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் வாகனங்கள் டி.பி. ரோட்டில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியாலும் பக்தர்கள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகிலும், தாலுகா அலுவலகம் அருகிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் நகர எல்லைக்குள் வாகன நெருக்கடி காணப்பட்டது.