தமிழ்நாடு செய்திகள்

பிறர் பெயரை பயன்படுத்தி போலியான புகார் அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-04-30 14:38 IST   |   Update On 2025-04-30 14:38:00 IST
  • பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். எனது வழக்கறிஞர் அறைக்கு சென்றபோது எனது பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து படித்த போது காவல்துறை கண்காணிப்பாளர் மீது நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாருக்கு நான் நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்திருந்தது.

இதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இதுபோன்று எந்தவித காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் மனு கொடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அப்பொழுது தான் தெரிந்தது எனக்கு நடந்தது போல் பல வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்களின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு போலியான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்து.

இதுபோன்று பிற வழக்கறிஞர்கள் பெயர்களை பயன்படுத்தி புகார்கள் அனுப்புவதால் மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகுகிறார்கள். மேலும் தனிப்பட்ட முறையில் பகைமையும் உண்டாகிறது. உயர் அதிகாரிகளின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகார் போல் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தி பல புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது. நீதிபதிகளுக்கும் இது போன்று புகார் சென்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News