மது போதை தகராறில் மோதல்- துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் காயம்
- இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
- சந்தோஷ் குமாருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிலையில் லால்குடி அருகே கே வி பேட்டை-செங்கரையூர் நடுப் பகுதியை சேர்ந்த பாண்டி துரை, நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன் அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு மது போதையில் சென்று உள்ளனர்.
பின்னர் கோவிலில் அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் ஆகிய 3 பேரும் அந்தக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.
இதில் போதை தலைக்கேறிய பாண்டி துரை தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கே விட்டு விட்டு நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
வீரமணி, உடனே அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் முன்று பேரிடமும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர சொல்லி உள்ளார். வாகனம் அன்பில் பகுதியில் இருந்து உள்ளது. அதனை எடுத்துக் கொண்டு பாண்டிதுரை வீட்டிற்கு கொடுப்பதற்காக சென்றனர்.
அப்போது போதையில் இருந்த பாண்டி, சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை விலங்குகளை வேட்டை ஆடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் சந்தோஷ்குமார் வயிற்றில் ஏர்கன் துப்பாக்கியின் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சந்தோஷ் குமார் மயங்கி சுருண்டு விழுந்தார்.
உடனே அவரை அவரது நண்பர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது சந்தோஷ் குமாருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் பாண்டித்துரை வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள பாண்டித்துரையை தேடி வருகின்றனர்.