தமிழ்நாடு செய்திகள்

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது

Published On 2025-09-27 07:50 IST   |   Update On 2025-09-27 07:50:00 IST
  • சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.
  • விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும்.

சென்னை:

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.

இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.

விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவார்கள்.

Tags:    

Similar News