ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்- தேர்வுத்துறை விளக்கம்
- வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவ-மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுவரை இப்படிப்பட்ட தேர்ச்சி கிடைத்தது இல்லை. அதுவும் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 167 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பியடிக்க ஆசிரியர்கள் உதவி செய்திருக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த முறைகேடுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் எழுந்துள்ளது.
இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-
செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளை சேர்ந்த 414 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என மொத்தம் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மாதந்தோறும் பள்ளி அளவில் குறுந்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். இதனால் கடந்த அரையாண்டு தேர்விலும் அம்மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் 3,181 மாணவ-மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும்படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆகவே தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,
தேர்வின்போது காப்பியடித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை, மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர் என்று கூறி உள்ளனர்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,
அந்தப் பள்ளியில் மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்போம் என கூறி உள்ளார்.