முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை
- வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
- கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் கடுவனூர் கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் வசித்து வருபவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்காக கேசரி வர்மன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அவர் தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக வங்கி லாக்கரில் வைத்திருந்த சுமார் 200 பவுன் நகைகளை எடுத்து பீரோவில் வைத்திருந்தார்.
தனது மகள் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைப்பதற்காக கேசரி வர்மன் தனது மனைவியுடன் சென்னை சென்றார். வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
நேற்று நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் முனியன், பொன்னம்மாள் மற்றும் கேசரி வர்மன் உறவினர்களை ஒரு அறையில் கட்டிப் போட்டனர்.
பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோ மற்றும் பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகைளை கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டில் கட்டி போடப்பட்டு இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இன்று காலை மீட்டனர். இந்த கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.