தமிழ்நாடு செய்திகள்

ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்

Published On 2025-02-23 08:40 IST   |   Update On 2025-02-23 10:20:00 IST
  • பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
  • நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில், 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா மாதிரியான வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கில் ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதன்பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கிறிஸ்டியன் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் ஆகியோர் ஞானசேகரனிடம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன், நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஞானசேகரன் தனி ஒரு ஆளாக வீடுகளில் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கொள்ளையடித்த நகைகளை அடகு கடைகளில் வைத்தும் விற்றும் இருந்த நிலையில் அந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரனின் ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதுடன், பிரியாணி கடை வைத்ததாகவும், பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News