ஓசூர் அருகே அட்டகாசம் செய்து வரும் 32 யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
- யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன.
- 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன.
தளி:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூர் சானமாவு காட்டிற்கு 32 யானைகள் வந்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன. 11 யானைகள் போடிச்சிப்பள்ளி வழியாக காடு உத்தனப்பள்ளி, ஒன்னு குறுக்கி, கோட்டட்டி வழியாக தேன்கனிக் கோட்டை அருகே உள்ள பேவநத்தம் காட்டிற்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்றன.
அதேபோல 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த யானைகளை ஏற்கனவே சென்றுள்ள 11 யானைகளுடன் சேர்த்து மொத்தம் உள்ள 32 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது அந்த யானையை சின்னக்குத்தி வனப்பகுதிக்கு விரட்டி உள்ளனர். இதனால் சின்னக்குத்தி, பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி, உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.