தமிழ்நாடு செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழை: குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்

Published On 2025-10-18 10:03 IST   |   Update On 2025-10-18 10:03:00 IST
  • களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் சாலைகள், வயல்வெளிகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அம்பை, சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நான்குவழிச்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்குள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதுவே மாவட்டத்தின் அதிகபட்ச மழை அளவாகும்.

நெல்லையில் மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அணை பகுதிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையிலும், காட்டாற்று வெள்ளம் வந்து ஆற்றில் சேருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் 37 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் அதிகபட்சமாக 47 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அணைகளுக்கு வினாடிக்கு 1614 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 88 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 94 அடியை எட்டியுள்ளது.

அதேநேரம் கொடுமுடியாறு அணை நீர் இருப்பு நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்திருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 35½ அடியை எட்டியுள்ளது. அணைகள் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் டவுன் ரதவீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிக அளவு கடை அமைத்திருந்தனர். ஆனால் மழை பெய்வதும், ஓய்வதுமாக இருந்ததால் கடும் அவதி அடைந்தனர். மாநகரில் பாளையில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து, மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News