தமிழ்நாடு செய்திகள்

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு- கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Published On 2025-10-21 13:44 IST   |   Update On 2025-10-21 13:44:00 IST
  • மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.
  • பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை:

வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.

இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 

Tags:    

Similar News