நெம்மேலி கடலில் தூண்டில் வளைவு கேட்டு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
- மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
- அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளால் அருகில் குடியிருக்கும் மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. இன்று வரை பணிகள் ஏதும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் 150 மீனவர் குடும்பத்தினர் இன்று மீன்பிடிப்பை தவிர்த்தனர். பின்னர் தங்களின் உயிர் பாதுகாப்பிற்கு, அரசு விரைவில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கையை வைத்து, நெம்மேலி குப்பம் மீனவர் பஞ்சாயத்து சார்பில் 300-க்கும் மேற்பட்டோர், ஊருக்குள் நுழையும் சாலையில் அமர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.