தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் தேங்கி கிடந்த மழைநீரில் கப்பல் விட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2025-04-05 12:02 IST   |   Update On 2025-04-05 12:02:00 IST
  • சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
  • உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காட்டூர், காட்டூர் புதூர், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளை பொருட்களான தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், காலி பிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்தநிலையில் திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையால் தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாமல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் பூசணிக்காய் ,தக்காளி, கீரைகளை சாலையில் வீசிச்சென்றனர். சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.

தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தேங்கக்கூடிய மழை நீரை வெளியேற்றக்கூடிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தேங்கி கிடந்த மழைநீரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர். 

Tags:    

Similar News