போலி மாணவர் சேர்க்கை ஆணை வழங்கி போலீஸ்காரரிடம் ரூ.5 லட்சம் மோசடி- 5 பேர் மீது வழக்கு
- போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் மணி (வயது 44). இவரின் குழந்தைகளையும், தனது சகோதரரின் குழந்தைகளையும் சூலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விரும்பினார். அதற்காக கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் தனது நண்பர்களான சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆணை பெற்று தருவதாக கூறி போலீசார் மணியை நம்ப வைத்துள்ளனர்.
இதனை நம்பிய மணி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த சேர்க்கை ஆணையை வைத்து குழந்தைகளை மணி பள்ளியில் சேர்த்துள்ளார்.
பின்னர் அந்த ஆணை போலியானது என்பதை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து குழந்தைகளை பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோா் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.