தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மேலும் சிலரை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

Published On 2025-09-09 19:47 IST   |   Update On 2025-09-09 19:47:00 IST
  • ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மருதமுத்து, (அத்தாணி பேரூராட்சிக் கழக முன்னாள் துணைச் செயலாளர்)
  • ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். செல்வன்.

செங்கோட்டையனுக்கு ஆதரவான சில அ.தி.மு.க. நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சிலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு புறநகர் மேற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்

கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மருதமுத்து, (அத்தாணி பேரூராட்சிக் கழக முன்னாள் துணைச் செயலாளர்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ரா.மா. மணிகண்டன், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அருள் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.வி.எம். செந்தில் (எ) கோடீஸ்வரன், சத்தியமங்கலம் நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பிலும், 24-ஆவது வார்டு கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எஸ்.டி. காமேஷ் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News