துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
- துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான மாண்புமிகு ஜேபி நட்டா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.