மாஞ்சோலையில் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி யானைக்கூட்டம் நடமாட்டம்- தொழிலாளர்கள் அச்சம்
- யானைகள் மறைந்து நிற்பதற்கு ஏற்ற இடமாக மாறிவிட்டதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- பஸ்சில் வந்து இறங்கும் பயணிகள், குடியிருப்புக்கு செல்லும் வழியில் யானைகள் நிற்பதாக கூறினர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் காப்பி டிவிஷன் பகுதியில் யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது, குறிப்பாக இன்று காலை தேயிலை தோட்டத்தில் யானைகள் கூட்டம் நீண்ட நேரம் நின்றது.
1 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே நின்ற யானைகள், பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தன. இந்த எதிர்பாராத வருகை, மாஞ்சோலை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அவர்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே மாஞ்சோலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் கூட்டம் தொடர்ந்து நடமாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு 10 மணியளவில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மாஞ்சோலைக்கு வரும் பஸ்சில் வந்து இறங்கும் பயணிகள், குடியிருப்புக்கு செல்லும் வழியில் யானைகள் நிற்பதாக கூறினர்.
இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல தொழிலாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்புபோல தேயிலைத் தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், பல இடங்களில் காடுபோல அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த அடர்ந்த பகுதிகள் யானைகள் மறைந்து நிற்பதற்கு ஏற்ற இடமாக மாறிவிட்டதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கும் தொழிலாளர்கள், யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், நிம்மதியற்ற சூழலில் வாழ்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
வனத்துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தங்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் வனத்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.