தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ். அறிவுறுத்தல்

Published On 2025-11-25 15:13 IST   |   Update On 2025-11-25 15:13:00 IST
  • அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
  • தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மாவட்ட செயலாளர்கள் விளக்கி கூறினார்கள்.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் அந்த பணிகளில் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முறைகேடாக பதிவாகி உள்ள ஓட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த படியே மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றியும் அவர்கள் விளக்கி கூறினார்கள்.

Tags:    

Similar News