கீழடி விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்- எடப்பாடி பழனிசாமி
- தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான்.
- 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த விபரங்களை புத்தகங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உரிய விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
தமிழகத்தில் இதுவரை நடந்த 39 அகழாய்வு பணிகளில் 33 அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடத்தப்பட் டது. கீழடி அகழாய்வு என்பது மிக முக்கியமானதாகும். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் புளோரிடா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது கீழடி விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர். அது யார் என எல்லோருக்கும் தெரியும்.
கீழடி குறித்த தொன்மையை ஆய்வகத்தில் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும், முயற்சி செய்திருக்க வேண்டும். கீழடி தொடர்பாக மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது, அதற்கு தி.மு.க. அரசு என்ன விளக்கம் அளித்தது என தெரியவில்லை. இதைப் பற்றி தெரியாமல் பதிலளிக்க முடியாது.
தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான். ஆனாலும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்.
இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 196 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. முதல்வர்கள் இருந்தால் தான் கல்லூரி பேராசிரியர்கள் கட்டுப்பாடோடு இயங்குவார்கள். ஆனால் நிறைய கல்லூரிகளில் பேராசிரியர்களும் இல்லை. எப்படி தரமான கல்வி கிடைக்கும்.
ஒவ்வொரு கல்லூரிக்கும் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்கள் 5.50 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 50 ஆயிரம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அரசு அறிவித்த எதையும் செய்யவில்லை. காலி பணியிடங்கள் இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். மருத்துவத் துறை, கல்லூரிகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இப்படி தமிழகத்தில் எல்லா துறையும் பின்னடைவாக உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. அரசு முறையாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கீழடி அருங்காட்சியகத்தை எடப்பாடி பழனிச்சாமி சுற்றி பார்த்தபோது அங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் லேப்டாப் கொடுப்பதை இந்த அரசு நிறுத்திவிட்டது. எங்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டும். உங்கள் ஆட்சியில் லேப்டாப் கொடுக்கப்படும் என உறுதி அளித்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என கூறினார்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி லேப்டாப் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என கூறாதீர்கள். வாக்களிப்பது அனைவரின் கடமை. லேப்டாப் திட்டம் அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார்.