அ.தி.மு.க. 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
- ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.ரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17-ந்தேதி, 18-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ந்தேதியன்றும் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஆகியோரது உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்படி எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி சேலம் புறநகர் மாவட்டத்தில் பேசுகிறார்.