சாதி, மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள் - துரை வைகோ
- வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன்.
- வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடும்.
மதுரை:
மதுரையில் மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு துரை வைகோ பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் எந்த ஒரு மதமும் இதுபோன்ற இழிச்செயல்களை ஆதரிப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வரும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தாக்குதலை மதவாத சக்திகள் வேறு விதமாக கொண்டு சென்று அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.
வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன். வலது அரசியல் நம் நாட்டை விட்டு போக வேண்டும். ஒரு மனிதன் நல்லவரா? கெட்டவரா? என்ற அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுங்கள். சாதி, மதத்தின் அடிப்படையில் ஒரு போதும் தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து தாக்குதலுக்கு காரணம் வலது சாரி அரசியல் தான்.
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். மதவாத அரசியல் ஒழிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.