null
துபாய் விமான கண்காட்சியில் விபத்து: கோவைக்கு கொண்டுவரப்பட்ட தேஜஸ் விமானி உடல்
- இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது.
- விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்தவர்க்ள இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது. விமானி நமன் சியால் (வயது37) விமானத்தில் பறந்து சென்று சாகசம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் இயக்கிய விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் துபாய் விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை மீண்டும் அவரது உடல் வாகனம் மூலமாக ரேஸ்கோர்சில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு உயிரிழந்த விமானி நமன் சியால் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நமன் சியால் உடல் தனி விமானத்தில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊரான இமாச்சலபிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த நமன் சியால் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தார். அவர் சூலூர் விமானப்படை குடியிருப்பில் தனது மனைவி மற்றும 7 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி ஆவார்.
தற்போது அவர் விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நமன்சியால் விமான விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் குழந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர். நமன் சியால் உயிரிழப்பால், சூலூர் விமானப்படை தளம் சோகமயமாக காட்சி அளிக்கிறது.