மூதாட்டியை ஏற்றி வந்த அரசு பஸ், ஆஸ்பத்திரியில் நிற்கும் காட்சி.
மூதாட்டியை காப்பாற்ற அரசு பஸ்சை ஆம்புலன்சாக மாற்றிய டிரைவர்- பாராட்டுகள் குவிகிறது
- மின்னல் வேகத்தில் பஸ்சை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார்.
- டிரைவரின் சமயோசித செயலும், துரித முடிவும், மூதாட்டிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க உதவியது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாளை கே.டி.சி. நகர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று லேசாக மோதியது.
இதில் நிலை தடுமாறிய செல்லம்மாள் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
பொதுவாக இதுபோன்ற சூழல்களில் 108 ஆம்புலன்சை வரவழைத்து உதவி பெறுவது வழக்கம். ஆனால், ஆம்புலன்ஸ் வர ஆகும் நேரத்தையும், மூதாட்டியின் உடல் நிலையையும் கருத்தில் கொண்ட பஸ் டிரைவரான சுரேஷ்குமார், துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.
உடனடியாக, தான் ஓட்டி வந்த பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை தற்காலிக ஆம்புலன்சாக மாற்றினார். எந்தவித தாமதமும் இன்றி, மயங்கி விழுந்த மூதாட்டி செல்லம்மாளை சுரேஷ் குமார், கண்டக்டர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் ஏற்றினர்.
பின்னர், மின்னல் வேகத்தில் பஸ்சை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். 108 ஆம்புலன்ஸ் போல் மருத்துவமனை வளாகத்திற்குள் பஸ் விரைந்து சென்றதை அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
டிரைவரின் இந்த சமயோசித செயலும், துரித முடிவும், மூதாட்டிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க உதவியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்லம்மாளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் ஒரு உயிரை காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சி, மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக வணிக மேலாளர் பூல்ராஜ் கூறுகையில், இந்த விபத்தில் 2 தரப்பு மீதும் தவறு இருக்கிறது. எனினும் சற்றும் தாமதிக்காமல் பஸ்சில் அந்த மூதாட்டியை ஏற்றி சென்ற சம்பவத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அந்த பஸ்சில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.