மும்மொழிக் கொள்கையில் அரசியல் கூடாது.. NEP-ஐ ஏற்றால் மட்டுமே கல்வி நிதி தருவோம் - தர்மேந்திர பிரதான்
- இந்திய மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
- உ.பி.யில் சில மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற 'திங்க் இந்தியா' மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கிறது என்று கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்.
கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்(NEP) கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.
மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதியை தர முடியும். நிதியுதவி உள்ளிட்ட மத்திய அரசின் முயற்சிகள் மாணவர் நலன் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். இது சரியானது அல்ல. கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது.
நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் என பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர இத்தனை மொழிகள் கற்பிக்கப்படும்போது, மூன்றாவது மொழியால் என்ன பிரச்சனை?
நாங்கள் எந்த மொழியையும் யாரையும் மீது திணிக்கவில்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு மொழிகளும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஒரு மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு மொழிகளை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்.
பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது அவர்கள் விரும்பினால் தமிழைக்கூட தேர்வு செய்யலாம்.
இந்தியாவில் சுமார் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் தாய்மொழிகள் அல்லது பிராந்திய மொழிகளைப் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நான் ஒரு ஒடியா, எனக்கும் என் மொழி மீது அன்பு உண்டு, ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன். மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். சமூகம் அதைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை நிறுத்தி வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதான், "இது ஒரு அரசியல் பிரச்சினை. நான் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பலமுறை இதைப்பற்றி பேசியுள்ளேன். நாடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்றுக்கொண்டது. அதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை.
மத்திய அரசு பல திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களுக்கும், பிரதமர் போஷன் (மதிய உணவு) திட்டத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசஷ் மற்றும் எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்தபோது RTE நிதி குறித்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.
மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இதில் அரசியல் நலன்களைக் கொண்டு வர வேண்டாம். நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் " என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.