உயர்கல்வி துறையில் துக்ளக் தர்பார் நடத்தும் திமுக அரசு: கே.பி. அன்பழகன் கண்டனம்
- அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள்.
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு 1,200 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரைதான் உள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15.10.2025 தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, தமிழ் நாடு தனியார் பல்கலைக்கழகம் (திருத்த) சட்ட முன்வடிவினை சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு, அதிமுக-வின் எதிர்ப்பினை பதிவு செய்தேன்.
தொடர்ந்து 17.10.2025 அன்று இந்தச் சட்ட முன்வடிவு பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது, இந்தச் சட்ட முன்வடிவினை திரும்பப்பெற வேண்டும் என்றும், சட்டமாக இயற்றினால்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கடைபிடிக்க முடியாமல் சமூக நீதி பாதிக்கப்படும் நிலைமை என்று உயர் கல்வியில் ஏற்படவுள்ள பல்வேறு குளறுபடிகளை விரிவாக எடுத்துக் கூறினேன்.
தமிழ்நாட்டில் 3 பொறியியல் கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகவும், 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு உதவிபெறும் கல்லூரிகளாகவும் இருக்கின்றன. அதற்குமேல் 32 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் (பாலிடெக்னிக்) பல அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாக உள்ளன.
2008-ஆம் ஆண்டு மே மாதம், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டபோது, அதிமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய திமுக அரசு அந்தச் சட்ட முன்வடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது.
மக்களுடைய வரிப் பணத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கட்டிடங்கள், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால், அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய 90 சதவீத மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கக்கூடிய குறைந்த கல்விக் கட்டணம் பறிபோய்விடும். பொறியியல் கல்லூரிகளில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு 1,200 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரைதான் உள்ளது. ஆனால், சுயநிதி கல்லூரிகளில் பருவக் கட்டணமே 25,000/- ரூபாய் முதல்
1,00,000/- ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
எனவே, மக்களின் வரிப் பணத்தில் உருவான அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் இன்றைக்கு, இந்த அரசு கொண்டுவர முயலும் சட்டத் திருத்தத்தினால் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களாக மாறும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது, அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இரண்டு ஷிப்ட்-ஆக கல்லூரிகளை நடத்துகின்றனர். முதல் ஷிப்ட் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும், இரண்டாம் ஷிப்ட் சுயநிதி கல்லூரியாகவும் செயல்படுகின்றன.
முதல் ஷிப்ட்-ல் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இரண்டாம் ஷிப்ட்-ல் படிக்கும் மாணவர்களிடம் இவர்கள் நிர்ணயிக்கும் அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கிறார்கள். எனவே, இந்தச் சட்ட முன்வடிவை திருப்பப்பெற வேண்டும் என்று 17.10.2025 அன்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பல்கலைக்கழகங்கள்தான் பட்டங்கள் வழங்குகின்றன. அவைகளுக்கு ஒரு மதிப்பு உண்டு. சுயநிதி பல்கலைக்கழகங்களாக இந்தக் கல்லூரிகள் மாற்றப்படும்போது, மாணவர்களின் தரம் குறைவதோடு, அரசு பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவமும் குறைகிறது.
தற்போது அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் மண்டல அளவில் ஒரே விண்ணப்பம் மூலம் அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் சேர முடியும். மேலும், விண்ணப்பப் படிவக் கட்டணம் மிகவும் குறைவு. ஆனால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், சுயநிதி பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமும் மிகமிக அதிகம். இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தாலே ரூ. 4 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவிட வேண்டி வரும். மேலும், சுயநிதி பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு என்பது ஒரு கேள்விக்குறியே ஆகும்.
தற்போது, பொது வெளியில் அதிமுக-வின் எதிர்ப்பு மற்றும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளைக் கண்டு விடியா திமுக-வின் உயர்கல்வித் துறை அமைச்சர், திடீரென்று ஞானோதயம் வந்ததுபோல் இந்த சட்ட முன்வடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில், 2019-20 கல்வி ஆண்டிலேயே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதமாக உயர்ந்து, இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த அரசின் குளறுபடிகளால் உயர் கல்வியில் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக சரிந்துள்ளது வெட்கக்கேடானது.
விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த நான்கரை ஆண்டுகளாக இதுபோல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பதும், அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கி, பின்னங்கால் பிடறியில் இடிபட புறமுதுகிட்டு ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது.
உதாரணமாக, தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி அறிவித்தபோது, எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கியதையும், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானக் கூடங்கள் நடத்த அனுமதி வழங்க முற்பட்டபோது, எதிர்ப்பு வந்ததும் அதை கைவிட்டதையும் தமிழக மக்கள் மறக்கவில்லை.
இப்படி, எந்த ஒரு திட்டத்திலும், சொல் புத்தியோ, சுய புத்தியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படும் திமுக ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். மக்களின் எள்ளி நகையாடுதலுக்கு உட்பட்டுள்ள இந்த ஆட்சி, முடிவுக்கு வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.