திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை மத்திய சிறை கைதியிடம் டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணை
- ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.
- சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
நெல்லை:
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி தனது வீட்டிலிருந்து அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார்.
அப்போது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனால் சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதனால் திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் மற்றும் தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோரை விசாரணை அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது. தொடர்ந்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்து திடீர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சுடலைமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தண்டனை கைதியான சுடலை முத்து திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற் பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருப்பவருமான செந்தாமரை கண்ணன் பறிமுதல் செய்து உடைத்து விட்ட நிலையில் இன்று டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் வந்து அவரிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
இன்று நாங்குநேரியில் அவர்கள் தங்கி உள்ள நிலையில் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் எனவும், தேவைப்பட்டால் கைதி சுடலைமுத்து திருச்சிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.