திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜரை விடிய, விடிய தரிசனம் செய்த பக்தர்கள்
- முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
- ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
ராமநாதபுரம்:
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் மரகத நடராஜரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். இன்று காலை மீண்டும் சந்தனம் பூசப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு மரகத நடராஜர் காட்சி அளித்தார்.
ராமநாதபுரம் அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் முதல் சிவ ஸ்தலமாக மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பகுதியில் தென்முகத்துடன் பச்சை கல்லினால் ஆன மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலியால் அதிர்வு ஏற்பட்டால் சேதமடைந்து விடும் என்பதால் ஆண்டுதோறும் முழுமையாக சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆருத்ரா தரின தினத்தன்று மட்டும் சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து, நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு கோவில் சிவச்சாரியர்கள் கோவில் நடை திறந்து மரகத நடராஜர் தீபாராதனை செய்தனர். இதன் பின்னர் சிலையில் உள்ள சந்தனம் களையப்பட்டு பால், பழம், பன்னீர், திருநீறு, சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசன திரவியங்கள் மூலம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதன் பின்னர் முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திரை விலக்கப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தரிசனம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்லால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் செய்தனர்.
ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது தரிசனம் ரூ.10, 100, 250 என டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே கோவில் நிர்வாகம் முழு கவனத்துடன் செயல்பட்டது. இக்கோவிலில் கட்டணமில்லா தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. சந்தனம் பாக்கெட் விற்பனை கடந்த ஆண்டு ரூ 100, இந்த ஆண்டு ரூ.250, ரூ.150 என உயர்த்தி விற்பனை செய்தனர். இக்கோவில் மரகத நடராஜர் தரிசனம் செய்வது ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் வரும் பக்தர்கள் அனைவரிடமும் கட்டணம் எவ்வளவு வசூல் செய்ய முடியும் என்ற நோக்கத்துடன் கோவில் நிர்வாகம் செயல்பட்டதாக பக்தர்கள் வேதனையடைந்தனர்.