தீபாவளியை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 26 ஆயிரம் ரவுடிகளை கண்காணிக்கும் போலீசார்
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
- தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. வெங்கட்ராமன், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சென்னை உள்பட அனைத்து மாநகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களில் ஏ.பிளஸ் ரவுடிகள் தங்களுக்கு கீழே அடியாட்களை வைத்துக்கொண்டு தாதாக்கள் போல செயல்பட்டு வருபவர்கள் ஆவர். இவர்கள்தான் இருந்த இடத்தில் இருந்த படியே போனில் பேசி மிரட்டி மாமூல் வசூலிப்பது உள்பட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் இதுபோன்ற ஏ.பிளஸ் ரவுடிகளும், ஏ.வகை ரவுடிகளும் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் யார்- யார் என்பதை கண்டறிந்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறையில் இருந்து விடுதலையாகி சுற்றி திரியும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ரவுடிகளோடு கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளையும், பிக்பாக்கெட் திருடர்களையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சுமார் 6 ஆயிரம் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 4 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் சென்னை மாநகர் முழுவதும் தங்களது பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளனர்.
இப்படி குற்ற செயல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, 'தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அமைதியான முறையில் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இது போன்ற பண்டிகை காலங்களில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மூலமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
இதன்படி சென்னை முதல் குமரி வரையில் தலைமறைவு ரவுடிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு உள்ளனர்.