தீபாவளி பண்டிகை - இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
- சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,268 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த 4 நாட்களும் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,268 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இந்த 4 நாட்களும் 6,110 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 20,378 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 4,253 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 15,129 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 760 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று மொத்தம் 2,852 பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 2,165 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 1,935 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,145 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 1,040 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,610 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக் கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.